14 பேருக்கு மரண தண்டனை ஆயுளாக குறைப்பு : ஜனாதிபதி கருணை
இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள், இறுதி வாய்ப்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனு தாக்கல் செய்த 14 பேரின் மனுக்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பரிசீலனைக்கு வந்தன. அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி குறைத்து உள்ளார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக 17 பேரை கொன்று குவித்த பியாராசிங் மற்றும் அவரின் மூன்று மகன்களான சரப்ஜித்சிங், சத்னாம் சிங், குருதேவ் சிங் ஆகியோர் தண்டனை குறைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கருணை மனுக்கள் 1991ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தன.
இதேபோல், சொத்தை அபகரிப்பதற்காக தன் மாமா, அவரின் மூன்று சிறிய குழந்தைகள் உட்பட ஐந்து பேரை ஒட்டு மொத்தமாக கொன்ற தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்த சுப்ரீம் கோர்ட், இவரது கொடூரத்தைக் கடுமையாக சாடி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
இவர்கள் தவிர உ.பி.,யில் வீடு ஒன்றுக்குள் புகுந்து, அங்கிருந்த மூன்று பேரை கொன்று, அவர்களின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றதோடு, பத்து வயது சிறுவனை சுட்டுக் கொன்று, அவனது உடலை தீயில் தூக்கி வீசிய, ஷெரோம், ஷியாம் மனோகர் மற்றும் நான்கு பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இவர்களின் தண்டனையை ஜனாதிபதி குறைத்துள்ளார். உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில், "இந்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். ஆனாலும், அவர்கள் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். பரோலில் அவர்களை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment