பன்றிக் காய்ச்சல்: தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு மிக அவசியம்: சுகாதாரத் துறை
பன்றிக் காய்ச்சல் நோயாளிகள் குறித்து உரிய நேரத்தில் தொடர்பு கொண்டு தனியார் மருத்துவமனைகள் தகவலை தெரிவிக்க வேண்டும்; அப்போதுதான் பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியும் என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்றிக் காய்ச்சல் நோயாளியான வங்கி அதிகாரி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இறந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், பன்றிக் காய்ச்சல் முற்றிய நிலையில் அனுமதிக்கப்பட்டதால்தான் காப்பாற்ற முடியவில்லை .
சாதாரண சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி அறிகுறிகளுடன்தான் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். இந்தப் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். கோவை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு இரு பன்றிக் காய்ச்சல் நோயாளிகள் வீதம் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகின்றனர். சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சை மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. நோயாளி உடல்நிலை மிகவும் மோசமாகும்போதுதான் பன்றிக் காய்ச்சலுக்கான சோதனை நடத்தப்படுகிறது.
பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்படும் நோயாளிகளை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகிகளை அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் சரிவர ஒத்துழைப்பு வழங்குவதில்லை. நோய் பாதிப்பு குறைவாக இருக்கும்போதே வரும் நோயாளிகளை காப்பாற்றி விடுவோம் என்றார்.
No comments:
Post a Comment