அண்ணா பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க கூடாது
ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை மற்றும் பல்வேறு தண்டனை பெற்ற கைதிகள் சுமார் 1,400 பேரை தமிழக அரசு விடுதலை செய்தது. அதை எதிர்த்து ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், தமிழக அரசு விடுவித்த கைதிகளில் பலர் ஆயுள் தண்டனை பெற்று குறைந்த ஆண்டுகளே சிறையில் இருந்துள்ளனர். மேலும் அரசியல்ரீதியாக முக்கிய கொலை வழக்குகளில் தண்டனை பெற்றவர்களும் விடுதலையாகி உள்ளனர்.
எனவே, இந்த விடுதலையை ரத்து செய்ய வேண்டும். அண்ணா பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந் நிலையில் சுப்பிரமணிய சாமி இன்று காலை திடீரென உயர் நீதிமன்றத்துக்கு வந்து தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோரது பெஞ்ச் முன் ஆஜரானார்.
கைதிகள் விடுதலை தொடர்பான பொது வழக்கு இங்கு நிலுவையில் உள்ளது. ஆனால், வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று தமிழக அரசு 2,000 கைதிகளை விடுவிக்க பட்டியல் தயாரித்து வருவதாக ஒரு நாளிதழில் செய்தி வந்துள்ளது. எனவே, கைதிகள் விடுதலை தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கோரினார்.
அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள் வரும் 8ம் தேதி இது தொடர்பாக விசாரணை நடத்துவதாகக் கூறினர்.
No comments:
Post a Comment