பளுதூக்கு வீராங்கனை சானுவுக்கு வாழ்நாள் தடை
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சனமாச்சா சானுவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் அனுபவ பளுதூக்குதல் வீராங்கனை சனமாச்சா சானு(31). முன்னாள் ஆசிய சாம்பியனான இவர், 2002ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். பின் 2004ல் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். இதையடுத்து இரண்டு ஆண்டுகள் தடையை சந்தித்தார்.
பின் டில்லி, காமன்வெல்த் போட்டிக்கான குழுவில் இடம் பெற்றார். 53 கி.கி., தகுதிச் சுற்றில் மூன்றாவது இடம் பெற்ற இவர், வாய்ப்பை இழந்தார். தகுதிச்சுற்றின் போது இவரிடம், தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மையம்("நாடா') சார்பில் சோதனை நடத்தப்பட்டது. இவரது சிறுநீர் "ஏ' மாதிரியில் தடை செய்யப்பட்ட "மெத்தில்எக்சானியமைன்' இருந்தது கண்டறியப்பட்டது. நேற்று "பி' மாதிரியின் சோதனை முடிவு வெளியானது. இதிலும் தடை செய்யப்பட்ட மருந்து பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2004ல் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சானு, தற்போது இரண்டாவது முறையாக சிக்கியுள்ளதால், வாழ்நாள் தடையில் இருந்து தப்புவது மிகவும் கடினம்.
No comments:
Post a Comment