Tuesday, September 14, 2010

online tamil news

கலைச் செம்மல் விருது அறிவிப்பு

             மரபு வழி மற்றும் நவீன பாணி கலைப் பிரிவுகளை சேர்ந்த புகழ்பெற்ற வல்லுனர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
         ஓவியம், சிற்பம், பதிப்போவியம் ஆகிய கலைகளை வளர்க்கவும், பாதுகாக்கவும், பரப்பவும் இக்கலைகளில் ஈடுபட்டுள்ள படைப்பாளர்களை ஊக்குவிக்க, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு ஆரம்பிக்கப்பட்டது. 
          ஒவ்வொரு ஆண்டும் மரபு வழி கலைஞர் ஒருவருக்கும், நவீன பாணிப் பிரிவு கலைஞர் ஒருவருக்கும் கலைச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. இதன்படி, 2008-09 மற்றும் 2009-10ம் ஆண்டுகளுக்கான கலைச் செம்மல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டு, கலைஞர்களை தேர்வு செய்துள்ளார். 
            இதில், 2008-09ம் ஆண்டுக்கான கலைச் செம்மல் விருது, நவீன பாணி ஓவியங்கள் குறித்து இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் பல கண்காட்சிகள் நடத்திய சி.தட்சிணாமூர்த்திக்கும், மரபு வழி பிரிவில் கட்டட கலைத் துறையின் திறன் பெற்று, இந்தியா மற்றும் அயல்நாடுகளில் கோவில் பணிகளை மேற்கொண்ட கே.தட்சிணாமூர்த்திக்கும் வழங்கப்படுகிறது.
             
கடந்த 2009-10ம் ஆண்டுக்கான கலைச் செம்மல் விருது, நவீன பாணி ஓவியங்கள் குறித்து, இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் பல கண்காட்சிகள் நடத்திய ஆர்.பி.பாஸ்கரனுக்கும், மரபு வழி பிரிவில் கட்டட கலைத் துறையில் திறன் பெற்று, பல கோவில் பணிகளை மேற்கொண்ட டி.பாஸ்கரனுக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment