வவ்வால்களின் புகலிடமாக மாறிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், வவ்வால்களின் புகலிடமாக மாறியுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உலகப்புகழ் பெற்றது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் ஆயிரங்கால் மண்டபம் அழகுற அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் தற்போது 616 தூண்கள் மட்டுமே உள்ளன. மண்டபத்தின் முன்புறம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோபுரம் உள்ளது. இக்கோபுரம் பல்லவர் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.
ஆயிரங்கால் மண்டபத்தில் விகட சக்கர விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். ஆயிரங்கால் மண்டபத்தையொட்டி திருக்குளம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் அன்று, ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் ஏகாம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்பகுதியில் தளம் பெயர்ந்துள்ளது. மண்டபத்தை பராமரிக்க முடியாததால் கோவில் நிர்வாகம், மண்டபத்தை பூட்டி வைத்தது. பக்தர்கள் செல்லாததால் மண்டபம் பாழடையத் துவங்கியது. தற்போது மண்டபம் வவ்வால்களின் புகலிடமாக மாறியுள்ளது. ஆயிரங்கால் மண்டபம் உள்ளே ஆயிரக்கணக்கான வவ்வால்கள் உள்ளன. இதனால், மண்டபம் உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆயிரங்கால் மண்டபத்தைப் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 40 லட்ச ரூபாய் மதிப்பிற்கு மதிப்பீடு தயார் செய்தனர். ஆனால், நிதி ஒதுக்கப்படவில்லை. இன்று கூடுதல் நிதி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment