Wednesday, September 22, 2010

online tamil news


நேரு ஸ்டேடிய அலங்கார கூரை ஓடுகள் சரிந்தன

              காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு மேலும் ஒரு பின்னடைவாக புதன்கிழமை ஒரு விபத்து ஏற்பட்டது. தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் அலங்கார கூரைகளில் இருந்து ஓடுகள் சரிந்து விழுந்தன.
         தில்லியில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.           
         போட்டிக்காக ஸ்டேடியங்களைத் தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா நடைபெறும் தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அலங்கார கூரை அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.அப்போது அலங்கார கூரையில் பதிக்கப்பட்டிருந்த அலங்கார ஓடுகள் (டைல்ஸ்) சரிந்து விழுந்தன. 2 அடி நீளம், 2 அடி அகலமுள்ள 3 ஓடுகள் மேலிருந்து கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
             கடந்த 3 நாள்களில், இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது சம்பவமாகும் இது. ஸ்டேடிய நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை கடந்த திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.ஸ்டேடியத்தையும், வாகன நிறுத்துமிட பகுதியையும் இணைக்க கட்டப்பட்டு வந்த நடைபாலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. இதில் 27 பேர் காயமடைந்தனர்.முன்னதாக, தில்லி ஜும்மா மசூதி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதும், இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
             வீரர் விலகல்: இந்நிலையில், போட்டியில் சாதிப்பதைவிட உயிரே முக்கியம் எனக் கூறி இங்கிலாந்தைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீரர் பிலிப் இடாவ் விலகிவிட்டார்.ஏற்கெனவே போட்டி ஏற்பாடுகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக போட்டி அமைப்புக் குழு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
            போட்டி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சர்வதேச காமன்வெல்த் போட்டி சம்மேளனமும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் போட்டி ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருப்பதுடன் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து தினசரி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது அரசுக்கும், போட்டி அமைப்புக் குழுவுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. 

No comments:

Post a Comment